சேலம்: சேலம் அஸ்தம்பட்டியில் நேற்று காலை பட்டப்பகலில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் மாலுமி கொலைக்கு பழிக்குபழியாக நடந்த கொலை குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் மதன்குமார் (எ) அப்பு (28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த நான்கரை ஆண்டுக்கு முன்பு மோனிஷா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ஏராளமான குற்ற வழக்குகள் இருப்பதால், ரவுடிகள் பட்டியலான ‘பிளாக்’ லிஸ்ட்டில் உள்ளார். சமீபத்தில், தூத்துக்குடியை சேர்ந்த மரடோனா என்ற கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் மதன்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வந்த அவர் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து மனைவியுடன் தங்கி, கடந்த 5 நாட்களாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். நேற்று காலை 10 மணிக்கு, 6வது நாளாக மனைவியுடன், அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். பின்னர் காவல்நிலையம் அருகே மணக்காடு பகுதியில் உள்ள ‘பாஸ்ட் புட்’ கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென்று கடைக்குள் புகுந்த 6 பேர் கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால், மதன்குமாரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவரது கை மணிக்கட்டுடன் துண்டாகி, டேபிளில் விழுந்தது. தலையிலும் வெட்டு விழுந்து ரத்தம் பீறிட்டதால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் மதன்குமார் துடிதுடித்து உயிரிழந்தார். கண்முன் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அவரது மனைவி கதறி துடித்தார். பின்னர் அந்த கும்பல் 2 பைக்கில் தப்பி சென்றது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட கப்பல் மாலுமி மரடோனா என்பவரின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, 4 தனிப்படை அமைத்து கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடிகள் மோதலும் காரணமா?
தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி மதன்குமாரும், ரவுடி பிஸ்டல் ஹரி என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. கட்டப்பஞ்சாயத்தில் பணம் யாருக்கு அதிகம் கொடுப்பது என்பதால் எழுந்த மோதலில் இருவரும் பிரிந்தனர். மோதல் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தீர்த்து கட்டுவதில் தீவிரமானார்கள். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மதன்குமாரை தூத்துக்குடியில் சுற்றிவளைத்து பிஸ்டல் ஹரி தரப்பினர் நடத்திய தாக்குதலில் அவரது 2 விரல் துண்டானது.
இதில் அவர் உயிர் தப்பினார். போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்துபோட செல்லும் போது ஆயுதங்கள் எதுவும் அவரிடம் இருக்காது என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் ெகாலை செய்தார்களா அல்லது, கப்பல் மாலுமி மரடோனா தரப்பினருடன் இவர்களும் சேர்ந்து இந்த கொலையை செய்தார்களா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. பிஸ்டல் ஹரி, அவரது நண்பர் கார்த்தி உள்ளிட்டோர் தற்போது அவர்கள் தூத்துக்குடியில் இல்லை. எனவே அவர்களை சுட்டுப்பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post சேலம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்; காதல் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி வெட்டி கொலை appeared first on Dinakaran.