பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன் அவரது அந்தரங்க வீடியோவை பார்க்கலாமா? ஆண் காவலர்களுக்கு ஐகோர்ட் கண்டனம்

11 hours ago 1

சென்னை: பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அவரது அந்தரங்க வீடியோவை ஆண் காவல்துறை அதிகாரிகள் பார்த்து விசாரித்ததற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது போன்ற வழக்குகளில் பெண் காவல் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற எங்கு புகார் அளிக்க வேண்டும், புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு விரிவான மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காக சம்பந்தப்பட்ட வீடியோவை அப்பெண் முன்னிலையில் 7 காவல்துறையினர் பார்வையிட்டதை ஏற்க முடியாது.

காவல்துறையின் இச்செயல் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் விசாரணைக்கு பெண் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் முன் அவரது அந்தரங்க வீடியோவை பார்க்கலாமா? ஆண் காவலர்களுக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article