முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் வந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் புறப்பட்டார். அப்போது சிதம்பரம் நகரில் சுமார் 7 கிமீ தூரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடுஷோ நடத்தினர்.
சாலையின் இருபுறமும் காத்திருந்த ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள், மாணவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இடையிடையே மனு கொடுக்க காத்திருந்தவர்களிடம் இருந்து வேனில் இருந்தபடியே மனுக்களையும் பெற்றுக் கொண்டார். சிதம்பரம் விழாவை முடித்துக்கொண்டு, சிதம்பரத்திலிருந்து மதியம் புறப்பட்டு மயிலாடுதுறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொள்ளிடம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். அதன்பின் திருவெண்காடு கீழவீதியில் உள்ள இல்லத்திற்கு சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலையில் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், செம்பதனிப்பு பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் கருவி, கீழையூர் வழியாக மயிலாடுதுறை ெசன்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இரவு 7 மணியளவில் மணக்குடி அருகே பாலாஜி நகரிலிருந்து ரோடு ஷோவை தொடங்கினார். இருபுறமும் அலைக்கடல் என மக்கள் திரண்டு நிற்க அவர்கள் மத்தியில் உற்சாகமாக கையசைத்தப்படி நடந்து சென்றார். அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை 4 கி.மீ. தூரம் நடந்தே சென்று ‘‘ரோடு ஷோ’’ நடத்தினார். வழிநெடுக இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வரை வரவேற்று உற்சாக கோஷம் எழுப்பினர்.
அப்போது மழையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் முதல்வர் பெற்றுக்கொண்டார். இந்த ரோடு ஷோவின் போது குழந்தைகளை கண்டதும் அருகில் சென்ற முதல்வர் அவர்களை கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த 9 அடி உயரம் உள்ள கலைஞரின் முழு உருவ சிலையை திறந்து வைத்து, 68 அடி உயரம் கொண்ட கம்பத்தில் திமுக கொடி ஏற்றினார். மயிலாடுதுறை சர்க்யூட் ஹவுஸில் இரவு முதல்வர் தங்கினார்.
The post சிதம்பரம், மயிலாடுதுறையில் 11 கி.மீ. முதல்வர் ரோடுஷோ: மழையிலும் மக்களிடம் மனு வாங்கினார் appeared first on Dinakaran.