கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் நேற்று புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மேலும், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற புனித வெள்ளி பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை, ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளி தினமாக அனுசரித்து வருகின்றனர்.
அதேபோல், இந்தாண்டு நேற்று புனித வெள்ளி நிகழ்வை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி இலங்கை முகாம், ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, மாதர்பாக்கம். சுண்ணாம்புகுளம், தேர்வழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிராரத்தனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள இருதய ஆண்டவர் தூய அண்ணல் ஆலயத்தில் நேற்று பங்குச்சந்தை ஆரோக்கிய வேளாங்கண்ணி ஸ்டாலின் தலைமையில் புனித வெள்ளி சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இயேசு போன்ற ஒப்பனையுடன் ஒருவர் சிலுவையை சுமந்து செல்ல, அவர் பின்னால் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்றனர். அதேபோல், ஆரம்பாக்கத்தில் உள்ள மாதா கோவில் சார்பில், பாதிரியார் பாப்பையா தலைமையில் புனித வெள்ளியை ஒட்டி சிலுவை பாதை எனும் தியான ஊர்வலம் நடைபெற்றது. இதில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பாடல்கள் பாடியும், இறைவனை பிரார்த்தனை செய்தபடி ஊர்வலமாக சென்றனர்.
The post கும்மிடிப்பூண்டியில் அகதிகள் முகாமில் புனித வெள்ளி பிரார்த்தனை appeared first on Dinakaran.