கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடக்கும் நிலையில், அங்குள்ள கேஸ்டிங் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.
குறிப்பாக இரும்பு உருக்காலை, கெமிக்கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, ஹைட்ராலிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, மின் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த சில நாட்களாக நடந்த வெவ்வேறு விபத்தில் 4 பேருக்கும் அதிகமான வட மாநில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனை சிப்காட் தொழில் பாதுகாப்புத்துறை அதிகாரி சென்னை கிண்டியில் இருந்தபடி தொலைபேசி வாயிலாகவே விசாரித்து வருவதாகவும், இதனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கும்ம்டிப்பூண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் டான் ப்ளாக் கேஸ்டிங் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜிட்டேந்திர புரூஷ்டி (27) என்பவர் பணியாற்றி வந்தார்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பாதுகாப்பு இல்லாமல் வெல்டிங் பணியில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளிகள் கூறுகையில், சிப்காட் பகுதியில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தமிழக தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை செயலாளர் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொடரும் உயிரிழப்புகள் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் சாவு? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.