கும்பாபிஷேக விழா: திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் யாக சாலை பூஜை தொடங்கியது

1 week ago 1

கடலூர்:

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்குப் பின் வருகிற 2-ந்தேதி (2.2.2025) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

இதற்கான திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று யாகசாலை பூஜை  தொடங்கியது. முன்னதாக காலையில் புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி யாகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. மாலை 4 மணிக்கு யாக சாலை பூஜை தொடங்கியது. இதில் அங்குரார்ப்பணம், கும்ப ஆராதனம் நடந்து இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றன. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு பூர்ணாகுதி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அக்னி பரணாயனம், மகாசாந்தி நடந்து இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற உள்ளது.

2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கும்பம் புறப்பாடு நடந்து, 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதன்பிறகு அன்றைய தினம் இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசாமி உபய நாச்சியாருடன் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Read Entire Article