கும்பமேளாவில் 30 பேர் பலி எதிரொலி; விவிஐபி பாஸ்கள் அனைத்தும் ரத்து: உத்தரபிரதேச அரசு நடவடிக்கை

2 hours ago 1

பிரயாக்ராஜ்: கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசலில் 30 பேர் பலி எதிரொலியாக விவிஐபி பாஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக உத்தரபிரதேச அரசு அதிகாரிகள் கூறினர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்ப மேளா நிகழ்ச்சில் நேற்று முன்தினம் அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்; 60 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது உத்தரபிரதேச அரசு நேற்று முதல் தொடர்ச்சியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், அனைத்து விவிஐபி நுழைவு பாஸ்களையும் ரத்து செய்தது.

மேலும் மகா கும்பமேளா நடக்கும் முழு பகுதியையும் வாகனமற்ற மண்டலமாக அறிவித்தது. மேலும் கும்பமேளா நடக்கும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் யாவும் பிரயாக்ராஜ் நகருக்கு வெளியே நிறுத்தப்படும். வரும் பிப்ரவரி 4ம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்கள் பிரயாக்ராஜ் நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கும்பமேளா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், ‘வி.வி.ஐ.பி பாஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மாவட்ட எல்லைகளில் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கம இடத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றனர். முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கலில் 30 பேர் பலியான சம்பவத்திற்கு விவிஐபி கலாசாரம் மற்றும் அரைகுறை ஏற்பாடுகளும் காரணம் என்று எதிர்கட்சிகள் கூறி வந்த நிலையில், தற்போது விவிஐபி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post கும்பமேளாவில் 30 பேர் பலி எதிரொலி; விவிஐபி பாஸ்கள் அனைத்தும் ரத்து: உத்தரபிரதேச அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article