பாட்னா: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதில் இருந்து கோடிக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இதனிடையே, நேபாளத்தை சேர்ந்த 9 பேர் காரில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து கும்பமேளாவில் கலந்துகொண்டனர். இந்நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு நேற்று 9 பேரும் காரில் நேபாளத்திற்கு புறப்பட்டனர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டம் மதுபானி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, அதேசாலையில் சிலர் பைக் சாகசம் செய்து கொண்டிருந்தனர்.
பைக்கில் சாகசம் செய்தவர்கள் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நேபாளத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கும்பமேளாவிற்கு சென்றுவிட்டு திரும்பிய நேபாள நாட்டினர் 5 பேர் பலி: பீகாரில் சோகம் appeared first on Dinakaran.