கும்பகோணம்: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்.பி கல்யாணசுந்தரம், எம்எல்ஏ அன்பழகன் மற்றும் முன்னாள் எம்.பி ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர். இதன்பின்னர் அமைச்சர் கோவி.செழியன் அளித்த பேட்டி: மாணவர்கள் கல்விக்காக ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முடிவெடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகததில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடங்கிய 18 கல்லூரிகளுக்கான ஒரு தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அதுகலைஞர் பெயரில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி, இந்தாண்டே பல்கலைக்கழகம் துவக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனையின்பேரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தோம்.சாக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கலையரங்கம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பழைய மாணவர் விடுதியை பார்த்து உள்ளோம். இந்த இடங்கள் தற்காலிக பல்கலைக்கழகம் துவக்குவதற்கு சரி என கலெக்டரிடம் அறிவுறுத்தியுள்ளோம். எனவே இந்த இடத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான கருத்துருவை கலெக்டர் அரசுக்கு அனுப்பி முதல்வரின் ஒப்புதலோடு அவர்கள் விரும்புகிற தேதியில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இந்த இடத்தில் துவங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிரந்தர பல்கலைக்கழகம் அமைக்கும் இடங்களை ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் 60 ஏக்கர் இடத்திலும் 50 ஏக்கர் இடத்திலும் இடம் தேர்வு செய்யலாம் என்று இருக்கிறோம்.
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் பாதையில் 40 ஏக்கர் இடம் உள்ளது. அதையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம். ஜூன் மாதத்தில் முதல்வர் தஞ்சை வருவதாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் விரும்பினால் அதே தேதியில் நிரந்தர பல்கலைக்கழகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன. முதல்வர் அறிவித்துள்ள இந்த அறிவிப்புக்கு ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.
The post கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை. அமைக்க இடம்: அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு appeared first on Dinakaran.