சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிய சாலை வசதிகளை ஏற்படுத்தாத காரணத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். வீராங்கல் ஓடையில் உள்ள குப்பைகள் தூர் வாரப்படாமல் இருப்பதாலும், தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாத காரணத்தாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதி முழுமையாக ஏற்படுத்தி தரவில்லை.
இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், முறையாக தடுப்புகள் அமைக்காமல் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக, பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதால், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பொது சுகாதார மையங்களில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் போதிய மருந்துகள் இல்லாத காரணத்தால் சிகிச்சை பெறுவதற்காக வருகைதரும் மக்கள் அவதியுறுகின்றனர். கல்லுக்குட்டை, கே.பி.கே.நகர், துரைப்பாக்கம், பாண்டியன் நகர், கெனால் பகுதி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். புழுதிவாக்கம், ஜல்லடியன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக குடியிருக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் குடியிருப்புதாரர்களுக்கு கிரயப் பத்திரம் வழங்காமல், அதற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். கருணாநிதி நகர் பகுதியில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்து தராமல் அலைக்கழிக்கப்படுவதால் மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர். பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலையை அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தர வலியுறுத்தியும், அதிமுக சென்னை புறநகர் மாவட்டத்தின் சார்பில் வருகிற 7ம் தேதி (புதன்) காலை 9.30 மணியளவில் பள்ளிக்கரணை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக கட்டிடம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பென்ஜமின் தலைமையிலும்; சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக சார்பில் 7ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.