கூடலூர், ஏப். 25: குமுளியில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளா எல்லையை ஒட்டி உள்ள குமுளிக்கு கடந்த ஏப்.23ம் தேதி தமிழ்நாடு அரசு பேருந்தை கம்பம் புதுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காட்டு ராஜா (50) என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்று, அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் குமுளி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் வடக்கன் நாடு பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் ஓட்டி வந்த லாரி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் மீது மோதியது.
உடனே பேருந்தில் ஏறுவதற்காக நின்றிருந்தவர்களும், ஏறிய பயணிகளும் அலறி அடித்து ஓடினர். நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஆனால் லாரி மோதியதில் பேருந்தின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இது குறித்து பேருந்து ஓட்டுநர் காட்டு ராஜா அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post குமுளியில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.