நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது. இன்று (அக்.26) காலையில் மழை குறைந்திருந்த நிலையில், திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். அப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாயத்தை தாண்டி நிரம்பியுள்ள நிலையில், மழை அதிகரித்தால் எந்நேரமும் அணைகளில் இருந்த தண்ணீர் திறந்து விடப்படலாம். எனவே அணைகள், ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.