குமரியில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம்: 100க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது

3 months ago 18


குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் அழிக்காலில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி அக்டோபர் 14ம் தேதி முதல் 17ம் தேதிவரை தென் தமிழக கடற்கரை, குமரி கடற்கரையில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ.வரை காற்றின் வேகம் இருக்க கூடும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நேற்று முதல் குமரி கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் கடலில் பெரும் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி விழுந்தது. இதனால் அழிக்கால் கிழக்கு தெரு, மேற்கு தெரு, நடுத்தெரு ஆகிய பகுதியில் சுமார் 100 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

கடற்ரையின் முன் வரிசை வீடுகளுக்குள் கடல் நீருடன் மணலும் புகுந்தது. இதனால் பொருட்கள் அனைத்தும் நாசமாயின. கடல் நீர் புகுவதை தடுக்க மீனவர்கள் மணல் மூடைகளை அடுக்கி வீட்டின் வாசலில் வைத்துள்ளனர். தண்ணீர் வடியாததால் உறவினர்கள் வீடுகளில் மீனவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் 107 பேர் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணி நடைபெற்றது. பணி முடிவுற்றதும் மக்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அழிக்காலில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் பிள்ளைத்தோப்பு கடற்கரை வழியாக முட்டம் துறைமுக பகுதிவரை சென்று பாய்ந்தது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி கடலில் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளது. இதனால் கடலில் இறங்கவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சன்ரைஸ் பாயின்ட், முக்கடல் சங்கமம், கடற்கரை படித்துறை பகுதிகளில் தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்துள்ளனர். கடலில் இறங்க முயற்சிக்கும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் காவல் துறையினரும் திருப்பி அனுப்பினர்.

The post குமரியில் நள்ளிரவு திடீர் கடல் சீற்றம்: 100க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article