*3பேர் படுகாயம்; 34 எருமை மாடுகளும் இறந்தன
கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், டிரைவர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். 3பேர் படுகாயம் அடைந்ததுடன், 34 எருமை மாடுகள் உயிரிழந்தன.மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, சென்னை கோயம்பேட்டிற்கு வெங்காய பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று, நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே பந்தாபூர் பக்கமுள்ள கதிரியை சேர்ந்த நாராயணன்(45) என்பவர் ஓட்டி வந்தார்.
கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பர்கூர் அருகே உள்ள அத்திமரத்துப்பள்ளம் அருகே நேற்று காலை 5.45 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் தடுப்பு சுவற்றை தாண்டி எதிர் திசையில் சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றது. அப்போது, ஆந்திர மாநிலம் நந்திபாளையம் பகுதியில் இருந்து கோவை நோக்கி எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், வெங்காய லாரியின் டிரைவர் நாராயணன், மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் டிரைவரான திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அருள்ஜோதி(54), உடன் வந்த மாற்று டிரைவரான, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மணிகண்டன்(35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மாடுகளை ஏற்றி வந்த லாரியில் வந்த ஆந்திர மாநிலம் நந்திபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்(31), காதர்பாஷா(56), விஜய்(38) ஆகிய 3 பேரும், வெங்காய லாரியில் வந்த மகராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த பதாமி(40) ஆகிய 4பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் பதாமி உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன், பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த நாராயணன், அருள்ஜோதி, மணிகண்டன் ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மாடுகளை ஏற்றி வந்த லாரியின் பின்னால் வந்த கிரானைட் நிறுவனங்களுக்கான உதிரிபாகங்கள் ஏற்றி வந்த பிக்அப் வேன் மோதியது.
இதில் உதிரிபாகங்கள் கீழே விழுந்தன. ஆனால், அதிர்ஷ்டவசமாக வேன் டிரைவர் காயமின்றி தப்பினார். அதே நேரத்தில், லாரியில் கொண்டு வரப்பட்ட 40 எருமை மாடுகளில், 34 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
விபத்துக்குள்ளான லாரிகள் ஆங்காங்கே நொறுங்கி கிடந்ததாலும், வெங்காய லோடுகள் சிதறி கிடந்ததாலும் சென்னை- கிருஷ்ணகிரி சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கிரேன்களை வரவழைத்து, விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருமார்க்கமாகவும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ, நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களை கேட்டுக் கொண்டார்.
The post பர்கூர் அருகே கோர விபத்து லாரிகள் நேருக்கு நேர் மோதி டிரைவர்கள் உள்பட 4பேர் பலி appeared first on Dinakaran.