நாகர்கோவில்: குமரி மலையோரங்களில் பெய்த மழையால் மோதிரமலை - குற்றியாறு இணைப்பு தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் இழுத்து சென்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் மழை இன்றி வெயில் அடிக்காமல் மேகமூட்டத்துடன் கூடிய தட்பவெப்பம் நிலவி வருகிறது. அதே நேரம் இன்று பேச்சிப்பாறை மற்றும் பாலமோரில் கனமழை பெய்தது. பேச்சிப்பாறையில் 53 மிமீ., மழையும், பாலமோரில் 18 மிமீ., மழையும் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏற்கனவே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மோதிரமலை - குற்றியாறை மலை கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் தற்காலிகமாக மக்கள் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மோதிரமலை - குற்றியாறு பாலப்பணிக்காக கட்டுமான பொருட்கள் கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம், மற்றும் கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுமான பொருட்கள் ஆகியவற்றை வெள்ளம் அடித்து சென்றது. இதில் தற்காலிக பாலம் உடைந்து மோதிரமலை, குற்றியாறுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.