*சட்டக்கல்லூரி மாணவி சிக்கியது எப்படி? போலீஸ் விசாரணை
நாகர்கோவில் : குமரியில் கைதாகி உள்ள கஞ்சா கும்பலின் கூட்டாளிகள் பலர் தலைமறைவாகி உள்ளனர். செல்போன்களை ஆய்வு செய்து அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று முன் தினம் ஒரே நாளில் தக்கலை மற்றும் ஈத்தாமொழியில் தலா 5 பேர் வீதம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார்.
கைதான இரணியல் கம்மன்குடித்தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீஸ்குமார் (31), திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த பர்ஹத் லைலா (30), நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த ஷேக் சையது அலி என்ற பைசல் (30), இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த அனிஷ் என்ற சிட்டா(23), வெள்ளிமலை பிரகாஷ் (23), ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த அபிராம் குமார்(20), மங்காவிளை பகுதியை சேர்ந்த கபின்(25), கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்த சுரேஷ் (29), இடலாக்குடி அச்சன் கிணறு தெருவை சேர்ந்த முகமது ஷாபி(31), இரணியல் பகுதியை சேர்ந்த அபினேஷ்(29) ஆகிய 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுமார் 10.500 கிலோ கிராம் கஞ்சா இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 10 பேர் கைதான நிலையில் அவர்களின் கூட்டாளிகள் சிலரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மேலும் கைதானவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்படுகின்றன.
அவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. தக்கலையில் கைதான 5 பேரில் பர்ஹத் லைலா (30) பிஏ முடித்து விட்டு ஆந்திர மாநிலத்தில் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கணவரை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதீஷ்குமாருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாக அவருடன், பர்ஹத் லைலா பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். பிரதீஷ்குமார் தான், பர்ஹத் லைலாவை ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படிக்க வைத்தார் என கூறப்படுகிறது.
அவர் கஞ்சா வியாபாரி என்பது தனக்கு தெரியாது என பர்ஹத் லைலா கூறி உள்ளார். ஆனால் போலீசார் இதை நம்ப வில்லை. காவல்துறையினருக்கு சந்தேகம் வராமல் இருக்க பர்ஹத் லைலாவையும், பிரதீஷ்குமார் கஞ்சா கைமாற்ற பயன்படுத்தி உள்ளார் என கூறப்படுகிறது. பர்ஹத் லைலா செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பிரதீஷ்குமார் துணி வியாபாரி போல் சென்று, கஞ்சாவை கடத்தி வருவதாக கூறப்படுகிறது. பின்னர் இங்கிருந்து இவர்கள் வெளி மாவட்டங்களுக்கும் சப்ளை செய்து வந்துள்ளனர். தற்போது பிடிபட்ட 10 பேரும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது, இவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளதாக தனிப்படை போலீசார் கூறி உள்ளனர். இவர்களின் கூட்டாளிகள் சிலர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post குமரியில் ஒரே நாளில் 10 பேர் கைது துணி வியாபாரி போல் கஞ்சா கடத்தல் appeared first on Dinakaran.