குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 5 பேர் கும்பல் கைது

2 hours ago 1

*ஒன்றரை கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கஞ்சா உள்பட போதை வஸ்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெட்டிக்கடைகளில் சோதனை, விழிப்புணர்வு கூட்டங்கள், கைது நடவடிக்கைகள், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குகள் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிக அளவில் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

இந்தநிலையில் நாகர்கோவில் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து ரயில்களிலும், பஸ்களிலும் கஞ்சா கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் சப்ளை செய்யப்படுவது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். நாகர்கோவிலில் கோட்டார் போலீசார் எஸ்.ஐ மகேந்த் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நாகர்கோவில், ஒழுகினசேரி ரோடு, கீழதத்தையார்குளம் பகுதியில் உள்ள ஆலமரம் பகுதியில் சந்கேகத்திற்கிடமான வகையில் 5 பேர் கூடி நின்றுகொண்டிருந்தனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் நாகர்கோவில் மேலராமன்புதூரை சேர்ந்த பரத் பிந்த்ரோ மகன் கார் டிரைவரான தீபக் பிந்தரோ (25), தடிக்காரன் கோணம், அண்ணாநகரை சேர்ந்த அசோக் மகன் வெல்டிங் தொழிலாளியான ஆகாஷ் (23), ரெத்தினபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் மணி மகன் கிராம்பு பறிக்க செல்கின்ற தொழிலாளி ஜோசப்ராஜ் (23), திருப்பதிசாரம், என்.எஸ்.கே நகர் முத்துகுமார் மகன் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றுகின்ற கிருஷ்ணன் (22), நாகர்கோவில், வடக்கு நெசவாளர் காலனியை சேர்ந்த சுந்தர் மகன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற ஹம்சவர்தன் (22) என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களை சோதனை செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் கஞ்சாவை பெங்களூரு சென்று வாங்கி அதிக லாபத்திற்காக சிறிய பொட்டலமாக போட்டு, பைக், கார் போன்றவற்றில் கொண்டு சென்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் எஸ்.ஐ.கள் சத்தியசோபன், மகேஷ் ஆகியோர் தலைமையில் பிடிபட்டவர் வீடுகளிலும் சோதனை நடத்தினர். மேலும் தீபக் பிந்த்ரோ, கிருஷ்ணன் ஆகியோரின் வடசேரி, திருப்பதிசாரம் பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதில் ஆகாஷ், ஜோசப்ராஜ் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

The post குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 5 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Read Entire Article