குப்பையை தரம்பிரிக்கும்போது கிடைத்த விலையுயர்ந்த 4 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு: தூய்மைப் பணியாளரின் நேர்மை

1 day ago 4


மாதவரம்: மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரிக்கும்போது கிடைத்த புத்தம்புதிய 4 விலையுயர்ந்த செல்போன்கனை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு குவிந்தது. சென்னை மாதவரம் மண்டல பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை சேகரித்து அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி என்விரோ தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாதவரம்-செங்குன்றம் சாலையில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தையும் கிடங்கிற்கு கொண்டு வந்து அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம்பிரிக்கும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர் தங்கவேலு ஈடுபட்டுள்ளார்.

அப்போது குப்பையில் புத்தம்புதிய பாக்ஸ்கூட திறக்கப்படாத மொபைல் போன்கள் பெட்டி இருந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது 4 புதிய விலையுயர்ந்த செல்போன்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த போன்களை உடனடியாக சென்னை என்விரோ தூய்மை பணி நிறுவனத்தின் மண்டல தலைவர் அருண்புகழேந்தி, திவாகர் ஆகியோரிடம் அந்த ஊழியர் ஒப்படைத்தார். அந்த புதிய மொபைல் போன் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது, மாதவரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிறுவனத்தின் மொபைல் போன்கள் என்பதும் தவறுதலாக குப்பைத் தொட்டியில் விழுந்ததால் தூய்மை பணியாளர்கள் சேகரித்துகொண்டு வந்துள்ளனர் என்று தெரிந்தது.

அந்த ஒவ்வொரு போனில் விலை சுமார் ரூ.85 ஆயிரம் இருக்கும் என்று தெரிகிறது. அந்த 4 செல்போன்களையும் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே தூய்மை பணியாளர் தங்கவேலின் நேர்மையை மண்டல குழு தலைவர் நந்தகோபால், தூய்மை பணி நிறுவன என்விரோ அதிகாரிகள், மொபைல் போன்களை பெற்றுக்கொண்ட உரிமையாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

The post குப்பையை தரம்பிரிக்கும்போது கிடைத்த விலையுயர்ந்த 4 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு: தூய்மைப் பணியாளரின் நேர்மை appeared first on Dinakaran.

Read Entire Article