நிலக்கோட்டை, டிச. 18: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் கோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட செல்வ நகர், சந்தனமாதபுரம், இன்னாசி நகர், தாதகாப்பட்டி, கோட்டூர், நோட்டக்காரன்பட்டி, அப்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் தோட்ட குடியிருப்புகளிலும் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கோடாங்கிநாயக்கன்பட்டி அருகேயுள்ள மூன்று கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை செல்வநகர் அருகேயுள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கிடங்கு அமைத்து சேமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விளை நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் காற்று மாசுபட்டு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் எனக்கூறி இத்திட்டத்திற்கு இப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகம் வந்து தாசில்தார் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ‘நிலக்கோட்டை பேரூராட்சி குப்பை கழிவுகளை கோட்டூர் ஊராட்சி செல்வநகர் பகுதியில் சேமிக்க கிடங்கு அமைக்க அனுமதி அளிக்க கூடாது’ என தெரிவித்திருந்தனர்.
The post குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தாசில்தாரிடம் மனு appeared first on Dinakaran.