குன்றத்தூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

3 weeks ago 7

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே பழந்தண்டலம், கலைமகள் நகர் பகுதியில் ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ரசாயனங்களை சேகரிக்கப்படும் ஆட்டுத் தோலின்மீது தடவினால், அதன் தோல் மிருதுவாகி விடும் என்று கூறப்படுகிறது. இதனால், இங்குள்ள தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இந்த கெமிக்கலை அதிகளவில் இந்நிறுவனத்தில் இருந்து வாங்கி சேமித்து வைப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலைக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டிருந்தது. எனினும், இங்கு வேலை பார்க்கும் முருகேசன் (52) என்பவர் நேற்றிரவு தொழிற்சாலைக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, ரசாயன தொழிற்சாலைக்குள் குபுகுபுவென தீ பரவி, கொழுந்துவிட்டு எரிந்ததுடன், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் தாம்பரம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரசாயன தொழிற்சாலைக்குள் பரவியிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

எனினும், அதற்குள் தொழிற்சாலை முழுவதிலும் தீ பரவியதில், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரசாயன பேரல்கள், இயந்திரங்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்நிறுவன உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அவர் வந்த பிறகுதான் சேதமான பொருட்களின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று போலீசார் தெரிவித்தனர். இவ்விபத்து குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் ரசாயன தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post குன்றத்தூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article