*சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை
ஊட்டி : குன்னூர் ராணுவ பகுதியில் உள்ள ஏரி பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னூர் ராணுவ பகுதியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரியத்திற்கு சொந்தமான ஏரி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏரியில் புதிய 4 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். இதேபோன்று புதிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தனியார் அமைப்பின் உதவியுடன் செல்பி ஸ்பாட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி வனவிலங்குகளை மையப்படுத்தி அமைக்கப்பட்ட செல்பி ஸ்பாட் திறக்கப்பட்டது. இதனை வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபா சாஹிப் லோட்டே சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இனி வரும் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் வாரிய அதிகாரி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post குன்னூர் ஏரி பூங்காவில் செல்பி ஸ்பாட் appeared first on Dinakaran.