குன்னூர்: குன்னூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதிய விபத்தில் காரில் இருந்த போதை ஆசாமிகள் 3 பேர் தப்பியோடிவிட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வசம்பள்ளம் பகுதிக்கு நேற்று இரவு சென்ற 3 மது பிரியர்கள் மது அருந்திவிட்டு கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி கொண்டு, உபதலை வழியாக காரில் வேகமாக வந்தனர். அப்போது ஓட்டுபட்டரை மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் குன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்த போது கார் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் போலீசார் விசாரித்ததில், காரில் போதை பயணித்த 3 ஆசாமிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பியதாவும், பயத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காரை மீட்ட போலீசார் கார் உரிமையாளர் குறித்தும் விபத்து குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதிக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்தனர். இரவு நேரம் என்பதாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதுடன், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post குன்னூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதி விபத்து: போதை ஆசாமிகள் 3 பேர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.