குன்னூர் : குன்னூரில் தற்காலிகமாக செயல்படவுள்ள அரசு கலைக்கல்லூரியை தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.நீலகிரி மாவட்டத்தில் உயர்கல்விக்காக ஊட்டி, கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் உள்ளன.
அங்கு 8 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இதனிடையே குன்னூர், கோத்தகிரி மாணவர்களின் நலன் கருதி குன்னூரில் அரசு கல்லூரி விரைவில் தொடங்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைமுறையில் இருந்து வந்தது.
குறிப்பாக கடந்த 2022 ம் ஆண்டு ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அப்போதைய வனத்துறை அமைச்சரும், தற்போதைய அரசு தலைமை கொறடா ராமசந்திரன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசினார்.
மலை மாவட்டமான நீலகிரியில் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் அரசு கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் குன்னூர் பகுதியில் இதுவரை கலை அறிவியல் கல்லூரி இல்லாமல் இருந்தது. இதனால் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். மேலும் கல்லூரிகளில் மேற்படிப்பை தொடர உதகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் மார்ச் மாதம் 14-ம் தேதி தமிழக பட்ஜெட்டில் குன்னூர் பகுதியில் கலை கல்லூரி கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் மாணவ, மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குன்னூரில் பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து பல மாணவ, மாணவிகள் உதகை மற்றும் கோவையில் உள்ள அரசு கல்லூரிகளுக்கு செல்வதால், காலை 6.30 மணிக்கு சென்றால்தான் அரசு பேருந்து மூலமாக 9.30 மணிக்கு கல்லூரிக்கு சென்றடையும் சூழல் இருந்து வந்தது.
மேலும் மழை காலங்களில் கல்லூரிக்கு செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில் கிராமப்புற பகுதிகளில் இருந்து பேருந்துகள் தாமதமாக வரும் போது மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் மாணவ, மாணவியர்களுக்கு ஏதுவாக தமிழக அரசு முயற்சி மேற்கொண்ட இத்திட்டத்தை பலரும் மனதார வாழ்த்தி வந்த நிலையில், அதற்கேற்றவாறு இரண்டு மாதத்திற்குள் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையும் துவங்கியுள்ளது.
குறிப்பாக குன்னூரில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்த நிலையில், புதிதாக கல்லூரி கட்டும் வரை அறிஞர் அண்ணா பள்ளியை அரசு கலைக்கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு, நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இதனை முன்னிட்டு, நேற்று அரசு தலைமை கொறடா ராமசந்திரன் கல்லூரியின் வளாகம், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், மாவட்ட முன்னாள் சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சி.டி.என்.பாரூக் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
The post குன்னூரில் தற்காலிகமாக செயல்படவுள்ள கலைக்கல்லூரியை தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன் ஆய்வு appeared first on Dinakaran.