சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு சென்னையில் நேற்று கூடியது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை என்ற மதயானையை எதிர்த்து போராடும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு, ‘கல்விப் புரட்சி நாயகர்’ என்ற பட்டத்தையும் ஆசிரியர் கூட்டணி இந்த பொதுக்குழுவின் மூலம் அளிக்கிறது. மேலும், 1.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சிபிஎஸ்-ஐ ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். அரசாணை 243ஐ ரத்து ரத்து செய்து பழைய நிலையில் மாவட்ட முன்னுரிமையின்படி பதவு உயர்வு மற்றும் மாறுதல் வழங்க வேண்டும்.
தர ஊதியம் ரூ.5400 உடனடியாக தணிக்கை தடை நீக்க வேண்டும். உயர் கல்வி படித்தவர்களுக்கு பழைய நிலையில் ஊக்க ஊதிய ம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்கள் 2000 நிரப்ப உள்ள நிலையில் மேலும் 10 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்களை நியமிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை வழங்க வேண்டும். 100 நாள் சேலஞ்ச் திட்டத்தின் மூலம் 4532 பள்ளிகளை மதிப்பீடு செய்ததை ஆரம்ப ப ள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றின் மீது பள்ளிக் கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பொதுச் செயலாளர் இரா. தாஸ் தெரிவித்தார்.
The post கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை appeared first on Dinakaran.