குண்டலினியை வசமாக்கும் சைலபுத்ரி துர்கா

3 weeks ago 7

துர்கை என்றாலே, துக்கங்களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரணை போல காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களை காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் “நவ துர்கை’’ என்று, கூறப்படும் ஒன்பது வடிவங்கள் மிகவும் சிறந்தவை. அம்பிகை எடுத்த அவதாரங்களை அழகாக எடுத்து உரைக்கும், தேவி மகாத்மியம் என்ற, மார்கண்டேய புராணத்தின் பகுதி.

இதில் அனைத்து வித மந்திரங்களும் அடங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதையை போல இதிலும் எழுநூறு ஸ்லோகங்கள்தான் இருக்கிறது என்பதால், இதை பகவத் கீதைக்கு சமமாகவே கருதுகிறார்கள். இந்த தேவி மகாத்மியத்தில், கூறப்படும் நவ துர்கைகளில், முதலாவது துர்கையாக இருப்பவள்தான் “சைலபுத்ரி துர்கா’’. இந்த துர்கையின் மகத்துவத்தை காண்போம் வாருங்கள்.

புராணங்களில் சைலபுத்திரி துர்கை

ஜகத்திற்கே தந்தையாக விளங்கும் ஈசன், தவத்தில் இருக்கிறார். அவரால்தான் உலக படைப்பு நிகழ வேண்டும் என்று பிரம்மா புரிந்து கொள்கிறார். அதற்கு தவத்தில் இருக்கும் ஈசன், தவம் கலைந்து எழுந்து உலக படைப்பில் நாட்டம் கொள்ள வேண்டும் என்று பிரம்மா தெரிந்து கொள்கிறார். ஈசனின் தவத்தை கலைக்கும் வல்லமை யாருக்கும் இல்லை என்று பிரம்மா புரிந்து கொள்கிறார். ஆகவே, ஆதி பராசக்தியை நோக்கி தவம் செய்கிறார்.

அவரது தவத்திற்கு மனம் கனிந்த தேவி, காட்சி தந்து, தட்சனுக்கு மகளாக பிறந்து ஈசனை மணந்து உலக படைப்பை செய்கிறேன் என்று வரம் தந்து மறைகிறாள். மேலே நாம் கண்ட கதை காளிகா புராணத்தில் வருகிறது. இப்படி பிரம்மனின் தவத்திற்கு கனிந்து, பூ உலகில் தட்சன் என்ற பிரம்மாவின் புதல்வனுக்கு மகளாக அவதரிக்கிறாள் இறைவி. அவளை மணக்கிறார் இறைவன். ஆனால், விதி வசத்தால் தட்சன் ஆணவம் அடைகிறான். ஆணவம், அவன் கண்ணை மறைக்க, முழு முதல் கடவுளான ஈசனையே வெறுக்கிறான்.

ஈசனை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு பெரும் யாகம் செய்கிறான். அதில் ஈசனை அழைக்கவும் இல்லை. அவருக்கு அவிர்பாகமும் வழங்கவில்லை. தந்தை யாகம் செய்யும் சங்கதியை, தட்சன் மகளாக பிறந்து, பரமனை மணந்த அம்பிகை அறிகிறாள்.தந்தை பாசம் மிகுகிறது அம்பிகைக்கு. அழையாத யாகத்திற்குச்செல்ல ஈசனிடம் அனுமதி கேட்கிறாள். ஈசன் மறுக்கிறார். இருந்தும் விடாப்பிடியாக தந்தை தட்சன் செய்யும் யாகத்திற்கு வருகிறாள்.

தட்சன், ஈசனையும் அவமதித்து, ஈசன் மனைவி என்பதால் மகள் என்றும் பாராமல் அம்பிகையையும் அவமதிக்கிறான். இதனால் கோபமடைந்த அம்பிகை, யாக சாலையிலேயே தனது யோக அக்னியில் புகுந்து தேகம் துறக்கிறாள். விஷயம் அறிந்த ஈசன், அம்பிகையைப் பிரிந்த சோகத்தில், தட்சனையும் அவன் யாகத்தையும் அழிக்கிறார். பிறகு ஒரு வழியாகக் கோபம் தணிந்தவராக தவத்தில் அமர்கிறார்.

இதற்கிடையில், தட்சனின் யாக சாலையில், தேகத்தை துறந்த தேவி, பர்வத ராஜனான ஹிமவானின் மகளாக பிறக்கிறாள். பிறகு செயற்கரிய தவங்களை செய்து. ஈசனை மணக்கிறாள் அம்பிகை.
ஹிமாவனும் அவனது மனைவியான மேனாவதியும் அம்பிகையை நோக்கி தீவிரமாக தவம் செய்கிறார்கள். ஹிமவான் மலைகளின் அரசன். அவரது மனைவி மேனாவதி மேருமலையின் புதல்வி. இருவரும் செய்த பெரும் தவத்தால், ஒரு சிறு குழந்தை உருவில், அவர்கள் நீராடும் தடாகத்தில் ஒரு தாமரை பூவின் நடுவே குழந்தையாக தேவி தோன்றுகிறார். (ஸ்கந்த புராணத்தில் வரும் வரலாறு). இப்படி ஹிமாவானுக்கும் மேனாவதிக்கும் மகளாக பிறந்த அம்பிகையை, நாம் சைல புத்திரி என்று அழைக்கிறோம்.சைலம் என்றால் மலை. மலையரசன் மகளாக பிறந்ததால், மலையின் புதல்வி என்று அம்பிகை அழைக்கப்படுகிறாள்.

சிவதாண்டவமும் சைலபுத்திரி துர்கையும்

நவராத்திரி நாட்கள் தேவிக்கு விசேஷம் என்பதை நாம் அறிவோம். ஆனால், ஈசன் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் விதவிதமான நடனம் புரிகிறார் என்பது பலரும் அறியாத ரகசியம் ஆகும். நவராத்திரியின் முதல் நாளில், வலக்காலை ஊன்றி இடக்காலை தூக்கி இறைவன் ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார். அப்படி ஆடும்போது தனது கால் விரல்களால், “ரிஷி மண்டலம்’’ என்ற யந்திரத்தை தரையில் வரைகிறார். அப்படி இறைவன், வரைந்த ரிஷி மண்டல யந்திரத்தில் இருந்து உதித்தவளே “சைல புத்திரி துர்கை’’ என்று சிவ ஆகமங்கள் சொல்கிறது.

பரம்பொருளின் வாம சக்தியும் சைலபுத்திரியும்

யஜூர் வேதத்தில், ஈசனின் சக்திகளை பட்டியலிடும் ஒரு ரிக்கு வருகிறது. “வாம தேவாய நமோ..’’ என்று தொடங்கும் அந்த ரிக்கு, ஈசனின் ஒன்பது சக்திகள் என்னென்ன என்பதை சொல்கிறது. வேதங்கள் கூறும், ஈசனின் இந்த ஒன்பது சக்திகளே, நவ துர்கைகள் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில், நவ துர்கையில் முதல் துர்கையான சைலபுத்திரி துர்கை, ஈசனின் “வாமை’’ என்ற சக்தியின் வடிவம். இந்த “வாமை’’ என்ற சக்தி, பூமி தத்துவத்தை குறிக்கிறாள். யானை முதல் எறும்பு வரை பலப்பல படைப்புகளை செய்யும் ஈசனின் சக்திக்கு வாமை என்று பெயர். இந்த படைப்புக்கு தலைவனாக இருப்பவர் வாமதேவர், அவருடைய சக்தி இவள். ஆகவே உலகை படைக்கும், இறைவனின் வல்லமையின் உருவகம் சைல புத்திரி துர்கை என்றால் அது மிகையல்ல.

சைலபுத்திரி துர்கையும் குண்டலினி யோகமும்

நமது, முதுகு தண்டின் அடிப்பகுதியில், முக்கோண வடிவில் இருக்கும் ஒரு குழியில் குண்டலினி என்னும் சக்தி இருக்கிறது. இந்த சக்தி ஒரு பாம்பின் வடிவில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒரு பாம்பின் வடிவில் இருக்கும் இந்த சத்தி, மூன்று சுற்றாக சுற்றிக் கொண்டு, தனது வாலைத்தானே கடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு யோக சாதகன், தனது யோக பயிற்சியின் மூலமாகவும், சாதனைகளின் மூலமாகவும், படுத்துக்கிடக்கும், இந்த சக்தியை எழுப்பி, தலை உச்சியில் இருக்கும் சஹஸ்ராரம் என்ற சூட்சும யோக சக்கரத்திற்கு கொண்டு வந்து அங்கே இறைவனோடு கலந்து இன்புற்று இருக்கிறான். இந்த சாதனைக்கு பெயர் குண்டலினி யோகம்.

இப்படி அரும் பெரும் சக்தியின் பெட்டகமாக இருக்கும், குண்டலினி, சுருண்டு இருக்கும் இடம்தான் மூலாதாரம் என்று அழைக்கப் படுகிறது. இது ஒரு சூட்சும யோக சக்கரத்தின் வடிவில் முதுகுத் தண்டின் கீழே இருக்கிறது.இந்த மூலாதார சக்ரம், பூமி தத்துவத்தை குறிக்கிறது. இதற்கு அதிதேவதையாக விளங்குவது, இந்த சைலபுத்திரி துர்கை. ஆகவே தன்னை வழிபடும் சாதகனுக்கு, எளிதில் குண்டலினி யோகத்தில் சித்தி அளிக்கிறாள் இவள். இன்றும் பல சித்தர் பெருமக்கள், குண்டலினி சித்தி அடைய இவளை பூஜிக்கிறார்கள்.

நவகிரகங்களும் சைலபுத்திரி துர்கையும்

நவகிரகங்களில் முக்கியமானவர் சூரியன். கிரகங்களில் இவர் மிகவும் வலுவானவர். சக்திவாய்ந்தவர். மேலும், சிம்ம ராசிக்கு இவர் அதிபதியாவார். சூரியன் ஒளி மற்றும் பிரகாசத்தைக் குறிக்கிறது. இதை ஒரு மனிதனின் ஆன்மா என்றும் சொல்லலாம். சூரிய கிரகம் தந்தை, எலும்புகள், கண் பார்வை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் இதயத்தை குறிக்கிறது. சூரியன், ஆணவம், தைரியம், அதிகாரம், நம்பிக்கை மற்றும் அரசாங்கத் துறை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஜாதகத்தில் சூரியன் நீச்சமாக இருந்தால், கண்பார்வை கோளாறுகள், அரசாங்கத்தால் தொல்லைகள் போன்றவை வரும். இப்படி சூரியன் ஜாதகத்தில் நீசமாக இருப்பவர்கள், சைலபுத்திரி துர்கையை வழிபடுவது அபரிமிதமான பலன்களை தரும்.

வேதங்களில் சைலபுத்திரி துர்கை

சாமவேதத்தில், கேன உபநிஷத் என்று ஒரு உபநிஷத் உண்டு. இதன் இறுதி பாகத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. தேவர்கள் அசுரர்களை வென்ற ஆணவத்தில் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒரு யட்சன், அவர்கள் முன்தோன்றி ஒரு புல்லை கிள்ளிப்போட்டு, அரக்கர்களை வென்ற உங்களால், இந்த புல்லை அழிக்க முடியுமா என்று கேட்கிறான். இதை கேட்ட தேவர்கள், கொதித்து எழுந்து புல்லை அழிக்க முற்பட்டு தோற்று தலை குனிகிறார்கள். அப்போது அந்த யட்சன் பெரிதாக நகைத்த படி மறைகிறான். அவன் மறைந்த இடத்தில் பெரிதாக ஒரு ஜோதி தோன்றுகிறது.

அந்த ஜோதியின் மத்தியில் இருந்து அம்பிகை வெளியே வருகிறாள். தேவர்கள் அம்பிகையை பார்த்து “நீ யார்’’ என்று கேட்க, அம்பிகை தன்னை ஹிமாவானின் மகள் என்றும் பார்வதி என்றும் சொல்லிக் கொள்கிறாள். பிறகு, தேவர்கள் அசுரர்களை வெல்லவில்லை, அவர்களுக்குள் இருந்து ஈசனே அனைத்தையும் செய்தார் என்று அவர்களுக்கு உபதேசம் செய்து மறைந்துவிடுகிறாள் அம்பிகை.

இப்படி தேவர்களுக்கு காட்சி கொடுத்து, அவர்களுக்கு நம்மால் ஆவது ஒன்றுமில்லை அனைத்தையும் செய்வது இறைவன்தான் என்று ஞான உபதேசம் செய்த தேவி, இந்த சைல புத்திரி துர்கைதான். ஆகவே இந்த துர்கை ஞானத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறாள்.

சைலபுத்திரியின் மகிமைகள்

லலிதா சஹஸ்ரநாமத்தில், “பார்வதி’’, “சைலேந்திர தனயா’’ போன்ற நாமங்கள் இந்த தேவியை குறிப்பதே. சைலம் என்றால் மலை. மலை ஜடமானது. தேவி ஞானமே வடிவானவள். ஜடப்பொருளான மலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதற்கு மகளாக தோன்றியவள். ஆகவே சைலேந்திர தனயா என்றும் பார்வதி என்றும் அழைக்கப்படுகிறாள். தேவி பாகவத புராணத்தில் கடைசி ஸ்காந்தத்தில், தேவியானவள் ஹிமாவானுக்கு, அதாவது மலையரசனுக்கு உபதேசம் செய்கிறாள்.

ஹிமவானுக்குமகளாக பிறந்த சைலபுத்திரி, தந்தைக்கு உபதேசம் செய்கிறாள். தனது விஸ்வரூபத்தை காட்டுகிறாள். தேவி பாகவதத்தில் இந்த அற்புதமான பகுதிக்கு “தேவி கீதை’’ என்றே பெயர். தேவியின் வாகனம் என்று சொன்ன உடனேயே நமக்கு நினைவுக்கு வருவதுசிம்மம்தான். இந்த சிம்மவாகனத்தை, அம்பிகை மகிஷாசுரனை வதைக்க தோன்றிய போது, அவளுக்கு பரிசாக தந்ததே மலையரசனான ஹிமவான்தான். மொத்தத்தில், சிம்ம வாகனம் என்பது தந்தை மகளுக்குத் தந்த பரிசு என்றால், அது மிகையல்ல. இப்படி சைலபுத்திரியின் புகழ் எண்ணிலடங்காதது.

வழிபடும் முறைகள்

நவராத்திரியின் முதல் நாளும், நவராத்திரியில் வரும் ஞாயிறும் இந்த தேவியை வழிபட சிறந்தது. இந்த தேவி காளையை வாகனமாக கொண்டு இரண்டு கைகளில் முறையே சூலத்தையும், தாமரையையும் தாங்குகிறாள். ஆனந்தமே வடிவாக காட்சி தருகிறாள் இந்த தேவி.

“வந்தே வாஞ்சிதாலாபாய சந்திரார்த க்ருத சேகராம்
வருஷாரூடாம் சூலதராம்ஷைல புத்ரீம் யஷஸ்வினீம்’’
என்ற தியான ஸ்லோகம் சொல்லி நவராத்திரி முதல் நாளில் அம்பிகையை வழிபடுபவரை அம்பிகை அரணாக இருந்து காக்கிறாள் என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆகவே, நாமும் சைலபுத்திரி துர்கையை வணங்கி நற்கதி பெறுவோம்.

ஜி.மகேஷ்

The post குண்டலினியை வசமாக்கும் சைலபுத்ரி துர்கா appeared first on Dinakaran.

Read Entire Article