
அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். இதில் ஆண்கள் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வேப்பிலை வைத்து வணங்கி வந்தனர். நேற்று பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. இன்று 60 அடி நீளம் குண்டம் தயார் செய்யப்பட்டு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் உடலில் பூ சுற்றிக்கொண்டும், கையில் பிரம்பு வைத்தபடியும் ஒருவர் பின் ஒருவராக குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக கோவில் வளாகத்தில் தீர்த்த குடங்கள் ஏலம் விடப்பட்டன. அவற்றை பக்தர் ஒருவர் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். தீர்த்த குடத்தில் இருந்து நீரைக் கொண்டு விளக்கெரிய விடப்பட்டது. இந்நிகழ்வை பார்ப்பதற்காக அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
நாளை கம்பம் பிடுங்கும் நிகழ்வு மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெறும். அப்போது ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வார்கள்.