குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்.

4 months ago 19

*சோபாவில் கீறல் விழுந்து விட்டதா? அதே நிறமுள்ள உதட்டுச் சாயத்தை தேய்த்து, ஒரு துணியால் துடைத்தால் போதும். கீறல் மறைந்துபோகும்.
* மிக்ஸி பிளேடை கழற்ற முடியவில்லையா? பிளேடு மூழ்கும் அளவிற்கு வெந்நீர் விட்டு, சற்று நேரம் கழித்து வெந்நீரை கொட்டி விட்டு, எளிதாக பிளேடை கழற்றலாம்.
* மைக்ரோ ஓவனின் உட்புறத்தை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடம் வைத்தால் போதும். பிசுக்குத் தன்மையை நீராவி எடுத்து விடும். பின்பு ஒரு சுத்தமான ஈரத்துணியால் துடைக்க வேண்டும். கண்டிப்பாக கிளீனிங் ஆசிட் உபயோகிக்கக் கூடாது.
* கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு சமைக்கும்போது கொய்யா இலைகளை சேர்த்து பரிமாறலாம். கொய்யா இலை அரிப்புத் தன்மையை இழுத்துக்கொள்ளும்.
* புளிக்கரைசல் மீந்து விட்டால் உப்பு சேர்த்து வைத்தால் மறு நாள் உபயோகிக்கலாம்.
* ஷூ பாலிஷ் தடவிய ஷூக்களை பதினைந்து நிமிடம் சூரிய ஒளியில் வைத்திருந்து பிறகு பிரஷ்ஷால் தேய்த்தால் பளபளப்பு கூடுதலாகும்.
* கண்ணாடிப் பாத்திரங்களை கழுவியபின் துணியால் துடைக்காமல், ஃபேன் கீழே வைத்து காயவிட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்தால் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
* மழை, பனிக்காலங் களில் தோல், மரப் பொருட்களில் பூஞ்சைக் காளான் படிந்து, துடைக்கா விட்டால் புள்ளி, புள்ளியாக கறையாகும். இதை தவிர்க்க காய்ந்த துணியால் அழுத்தித் துடைத்து, வாசலின் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து வைத்தால் பூஞ்சைக் காளான் பூக்காது.
* பனீர் தயாரித்து மீந்த பால்நீரில் அழுக்கான கொலுசு, ஸ்பூன்களை இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிரஷ்ஷால் அழுத்தி தேய்த்துக் கழுவினால் புதுசுபோல பளிச்சிடும்.
* குக்கரை உப்புத் தண்ணீரில் கழுவக்கூடாது. குக்கரின் அடிபாகத்தில் உப்பு படிந்தால் வெப்பம் எளிதில் கடத்தப்படாது.
* காபி மேக்கரில் காபி மட்டும்தான் போட வேண்டுமா? வெந்நீரும் போடலாம். சீரக கஷாயம் கூட தயாரிக்கலாம்.
* கடைகளில் பரிசாக தரும் பர்ஸ் மற்றும் கைப்பைகளில் உள்ள விளம்பர வாசகங்களை அகற்ற நினைக்கிறீர்களா? நெயில் பாலிஷ் ரிமூவரை பஞ்சில் நனைத்துத் தேய்த்தால் எழுத்துக்கள் மறைந்து போகும்.
* தோசைக்கல் பிசுபிசுப்பாக இருந்தால் சூடான தோசைக்கல்லில் கொஞ்சம் புளித்த தயிரும், உப்பும் போட்டு தேய்த்தால் பிசுக்கு நீங்கி பளபளப்பாகும்.
* டால்டா விட்டு ரவாவை நல்ல வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து அடுப்பிலேற்றி சர்க்கரைப் பாகு சேர்த்து கேசரி கிளறினால், அதிக டால்டா செலவில்லாமல், சுவையும் அதிகமாகும்.
* அடை அதிக கரகரப்பாக இருக்க விரும்பினால் பாசிப் பருப்பை அதிகமாக சேர்க்கவும்.
– அ. யாழினி பர்வதம், சென்னை.

The post குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள். appeared first on Dinakaran.

Read Entire Article