பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் கோயிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டி சென்றார். காலையில் கடையை திறந்தபோது கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். கல்லாவில் வைத்திருந்த ரூ.5400 பணத்தை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கடை மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், காகித ஆலை காலனியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள டீக்கடையில் இருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ராஜா(30) என்பதும், பள்ளிபாளையம் வந்து கோயிலாங்காடு முத்துசாமியின் மளிகை கடையில் புகுந்து, கல்லாவில் இருந்த பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விசாரித்து ராஜாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்பேரில், அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
The post பள்ளிபாளையம் அருகே மளிகை கடையில் திருடிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.