ராசிபுரத்தில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: அமைச்சர், எம்பி வடம்பிடித்தனர்

4 hours ago 2

ராசிபுரம்: ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் சித்திரை தேர்திருவிழாவில், அமைச்சர், எம்பி பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் உள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்ட இக்கோயில் சித்திரை தேர் திருவிழா, கடந்த ஏப்ரல் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் கட்டளைதாரர்கள் சார்பில் நாள்தோறும் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு வழிபாடு, திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை உற்சவர் கைலாசநாதரை பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷத்துடன் தேரில் ஏற்றினர். தொடர்ந்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நகரமன்ற தலைவர் கவிதா சங்கர், திமுக நகர செயலாளர் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை சிவனடியார்கள் கைலாய வாத்தியங்கள் வாசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷத்துடன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். திருத்தேர் கவரைத்தெரு வழியாக இழுக்கப்பட்டு, கடைவீதியில் இடைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது நாளான இன்று மீண்டும் தேரிழுக்கப்பட்டு, கச்சேரி வீதிவழியாக பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள நிலையை வந்து சேரும். 14ம்தேதி சத்தாபரணமும், 15ம்தேதி வசந்த உற்சவம் நடைபெறுகிறது.

The post ராசிபுரத்தில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: அமைச்சர், எம்பி வடம்பிடித்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article