
சென்னை,
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுகிறது என சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரித்து வருகின்றது.
இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதார துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த சி.பி.ஐ., இவர்களுக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில், சி.பி.ஐ. தரப்பில், கூடுதல் குற்றப்பத்திரிகையுடன் வழங்கிய பென்டிரைவில் பல ஆவணங்கள் குறித்த விபரங்கள் இல்லை என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட புகார் குறித்து சி.பி.ஐ. பதில் அளிக்கும்படி, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளது.