
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இதில் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால், இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை டிக்கெட் முன்பதிவில் மட்டும் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படம் மொத்தமாக 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜி.வி. பிரகாஷ், குட் பேட் அக்லி படம் குறித்து பேசி உள்ளார். அவர், "என்னிடம் ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு பாடல்களையும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் வாங்குவார்கள். அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரனிடமிருந்து எனர்ஜி கிடைக்கும். அது தனித்துவமானதாக இருக்கும். அதுதான் ஓஜி சம்பவம் பாடலின் பிளஸ். எல்லோரும் கால் பண்ணி அந்த பாடல் நல்லா இருக்கு என்று சொல்றாங்க. தனுஷ் எனக்கு கால் பண்ணி பாடல் சூப்பரா இருக்குன்னு சொன்னார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் " 'குட் பேட் அக்லி' படத்தின் இசை வேலைகளை மிகவும் நேசித்து செய்துள்ளேன். திரைப்படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.