![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/30/36589631-3.webp)
சென்னை,
தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பஸ்தன் படம் 6 நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், வெளிநாடுகளில் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் குடும்பஸ்தன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என் தம்பி மணிகண்டனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் குரு சோமசுந்தரம் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். திரையரங்குகளில் அலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் இது ஒரு சரியான குடும்ப பொழுதுபோக்கு படம். உங்கள் வழியில் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! " என்று பதிவிட்டுள்ளார்.