திருவொற்றியூர்: குடும்பம் நடத்துவதற்கு மனைவியை அனுப்பிவைக்க மறுத்த சித்தியை கொடூரமாக குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் ஐயாபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் தமிழ்ச் செல்வி(22). திருப்பூரை சேர்ந்த காளிமுத்து (25) என்பவருடன் தமிழ்ச்செல்விக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளார். இதன்பிறகு இரண்டு வீட்டினரின் சம்மதத்துடன் கடந்தாண்டு மார்ச் மாதம் 20ம்தேதி திருப்பூரில் உள்ள காளிமுத்துவின் வீட்டில் திருமணம்நடைபெற்றுள்ளது. இதன்பின்னர் சென்னையில் உள்ள தமிழ்ச்செல்வியின் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்தனர். இந்தநிலையில், தமிழ்ச்செல்வி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தினரிடம் பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது என்று காளிமுத்து கண்டிஷன் போட்டுள்ளார். மேலும் வேலையில் இருந்து மனைவி வரும்போது சந்தேகத்துடன் பல்வேறு கேள்விகள் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். இதன்காரணமாக தம்பதி இடையே பிரச்னை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன் மனைவியிடம் கோபித்துக்கொண்டு காளிமுத்து சென்றுவிட்டார். இதன்பிறகு தமிழ்ச்செல்வியும் கணவரை தேடவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த காளிமுத்து கடந்த 2 தினங்களாக தமிழ்ச்செல்வியின் வீட்டு அருகே நிற்பதும் செல்வதாக இருந்துள்ளார். அப்போதும்தமிழ்ச்செல்வி கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனிடையே தனது தாய் வீட்டில் இருந்தால் காளிமுத்து தன்னிடம் வந்து தகராறு செய்துவிடுவாராம் என்று கருதிய தமிழ்ச்செல்வி நேற்று அதே தெருவில் உள்ள சித்தி தனலட்சுமி (50) வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில், இன்று காலை தனலட்சுமி தனது வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் ெசய்தபோது காளிமுத்து வந்து, ‘’மனைவி தமிழ்ச்செல்வியை தன்னுடன் வாழ அனுப்பிவைக்கவேண்டும்’ என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளார். அதற்கு தனலட்சுமி, ‘’இங்கே எதற்காக வந்தாய், உன்னுடன் அனுப்ப முடியாது, நீ அவளை கொன்று விடுவாய்’’ என்று கூறி விரட்டியடித்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது திடீரென காளிமுத்து தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியின் கழுத்து, முதுகு என பல இடங்களில் சரமாரியாக குத்தியதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த தனலட்சுமி துடித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் காளிமுத்து அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து தனலட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் போலீசார் வந்து தனலட்சுமி உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, திருவொற்றியூர் காவல்நிலைய உதவி ஆணையர் இளங்கோவன், உதவி ஆய்வாளர் நவீன்குமார் ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர். இதுசம்பந்தமாக காளிமுத்துவை தேடி வருகின்றனர்.
The post குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுப்பு; சித்தி சரமாரி குத்திக்கொலை: கத்தியுடன் தப்பிய வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.