திருவொற்றியூர், பிப்.6: குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்து தகராறு செய்த, சின்ன மாமியாரை வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்த சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவொற்றியூர் ஐயா பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் தமிழ்செல்வி (22). இவரும் திருப்பூரைச் சேர்ந்த காளிமுத்து (25) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் நண்பர்களாகி பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி திருப்பூரில் உள்ள காளிமுத்துவின் வீட்டில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து இருவரும் தமிழ்செல்வியின் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தனர். எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணியாற்றி வரும் காளிமுத்து காதலிக்கும்போது ஆசையாய் பாசமாய் பேசியவர் திருமணம் முடிந்ததும் தமிழ்செல்வியை சந்தேகத்துடன் பேசி வந்துள்ளார். அக்கம் பக்கத்தில் பேசக்கூடாது, யார் வீட்டுக்கும் போக கூடாது என கடுமையாக நடந்து கொண்டுள்ளார். வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வரும்போது மனைவியிடம் சந்தேகத்துடன் கேள்விகளை கேட்டுள்ளார். தினமும் தமிழ்செல்வியை கடுமையாக டார்ச்சர் செய்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனைவியிடம் கோபித்துக் கொண்டு காளிமுத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அதன்பின் காளிமுத்து திரும்பி வரவில்லை. கணவனுடன் வாழப் பிடிக்காததால் தமிழ்செல்வியும் காளிமுத்துவை தேடவில்லை.
இந்நிலையில் காளிமுத்து கடந்த இரு தினங்களாக தமிழ்செல்வியின் வீட்டு அருகே வருவதும் போவதுமாக இருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட தமிழ்செல்வி தாய் வீட்டில் இருந்தால் காளிமுத்து தன்னிடம் வந்து தகராறு செய்வார் என்பதற்காக நேற்று முன்தினம் அதே தெருவில் உள்ள தனது சித்தி தனலட்சுமி (50) என்பவரது வீட்டில் தங்கி இருந்துள்ளார். நேற்று காலை ஐயா பிள்ளை தோட்டம் தெருவில் தமிழ்ச்செல்வியின் வீட்டு அருகே தனலட்சுமி வாசலை பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிமுத்து, மனைவி தமிழ்செல்வியை தன்னுடன் வாழ அனுப்பி வைக்குமாறு தனலட்சுமியிடம் கூறியுள்ளார். ‘‘இங்கே எதற்காக வந்தாய், உன்னுடன் அனுப்ப முடியாது, நீ அவளை கொன்று விடுவாய்’’ என கூறி அங்கிருந்து போகுமாறு தனலட்சுமி பதில் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது காளிமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனலட்சுமியின் கழுத்து, முதுகு என பல இடங்களில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்தம் வெளியேறி தனலட்சுமி அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே காளிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனலட்சுமி போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, திருவொற்றியூர் காவல் நிலைய உதவி ஆணையர் இளங்கோவன், உதவி ஆய்வாளர் நவீன்குமார் ஆகியோர் கொலை தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். காளிமுத்து வரும்போது கத்தியை மறைத்து எடுத்து வந்திருந்ததால் தன்னுடன் வாழ மறுத்த மனைவியை கொலை திட்டமிட்டுருக்கலாம். இதற்கு தடையாக இருந்ததால் ஆத்திரம் அடைந்து தமிழ்செல்வியின் சித்தி தனலட்சுமியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய காளிமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த சின்ன மாமியார் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை: திருவொற்றியூரில் வாலிபர் வெறிச்செயல் appeared first on Dinakaran.