குடும்பத்தகராறு: காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி எடுத்த விபரீத முடிவு

9 hours ago 2

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவருடைய மகன் சந்திரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள இண்டியம்பாளையம், சின்ன கரடு பகுதியை சேர்ந்தவர் ராக்கிமுத்து. இவருடைய மகள் பிரியதர்ஷினி (19).சந்திரனும், பிரியதர்ஷினியும் காதலித்து கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் 2 பேரும் புதுக்கொத்துக்காடு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

நேற்று முன்தினம் தம்பதி இருவரும் சின்ன கரடில் உள்ள பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். அரசூர் குள்ளம்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தம்பதி இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் 2 பேரும் தூங்குவதற்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில், நேற்று காலை அங்குள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் சந்திரனும், பிரியதர்ஷினியும் பிணமாக மிதந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கிணற்றுக்குள் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும் கடத்தூர் போலீசார் சம்பவ இடம் சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'நேற்று முன்தினம் சந்திரனுக்கும், பிரியதர்ஷினிக்கும் இடையே குடும்பம் நடத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 பேரும் தூங்குவதற்காக சென்றாலும், மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இரவு நேரம் என்றும் பாராமல் பிரியதர்ஷினி வீட்டைவிட்டு வெளியேறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறிக்கொண்டு சென்றிருக்கிறார்.

அவரை தடுப்பதற்காக சந்திரன் பின்னால் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து 2 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. கோபத்தில் சென்ற பிரியதர்ஷினி முதலில் குதித்து விட அவரை காப்பாற்றுவதற்காக சென்ற சந்திரனும் குதித்து 2 பேரும் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Read Entire Article