குடும்ப தகராறு காரணமாக மகளை சரமாரியாக வெட்டிய தந்தை: தடுக்க முயன்ற சித்திக்கு தலையில் வெட்டு

2 days ago 3

கூடுவாஞ்சேரி, ஏப்.17: ஊரப்பாக்கத்தில், குடும்ப தகராறு காரணமாக தந்தையே மகளை மார்பு, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். சண்டையை தடுக்க வந்த சித்திக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம், பிரியா நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (57). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில், முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். 2வது மனைவியான செல்வியுடன் செல்வராஜ் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை பரங்கிமலையில் வசித்து வரும் முதல் மனைவியின் மகள் தாட்சாயினி (37). தனது கணவர் டேவிட்ராஜுடன் நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கத்தில் உள்ள தனது தந்தை செல்வராஜை பார்ப்பதற்காக வந்தனர். அப்போது, குடும்ப பிரச்னை தொடர்பாக செல்வராஜுக்கும், அவரது மகள் தாட்சாயினிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாட்சாயினியை வெட்டினார். இதனால், அவருக்கு தலை, மார்பு, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது. அப்போது, அதே கத்தியை தாட்சாயினி பிடுங்கி அவரது சித்தி செல்வியை தலையில் வெட்டினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தனர். இதில், அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த, புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக தந்தை, சித்தி, மகள் இருவரும் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குடும்ப தகராறு காரணமாக மகளை சரமாரியாக வெட்டிய தந்தை: தடுக்க முயன்ற சித்திக்கு தலையில் வெட்டு appeared first on Dinakaran.

Read Entire Article