குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை; அதிர்ச்சி சம்பவம்

5 hours ago 4

சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் வேதகிரி (வயது 45). இவரது மனைவி ஹேமமாலினி (44). இவர்களது மகள், திருமணம் ஆகி கணவருடன் வெளியூரில் வசிக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த வாரம் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த வேதகிரி, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றார். இதனால் படுக்கையில் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன், தாயாரிடம் கூறினார். அதைகேட்டு பதறிய ஹேமமாலினி, வேகமாக மற்றொரு அறைக்கு சென்று அதே ரத்த அழுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று அவரும் மயங்கி விழுந்தார்.

மேலும் அதிர்ச்சி அடைந்த அவரது மகன், தாய்-தந்தை இருவரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஹேமமாலினி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வேதகிரியும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Read Entire Article