தூத்துக்குடி,ஜன.26: குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். நாடு முழுவதும் குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் போலீசார், வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் ரன்வே உள்ளிட்டப்பகுதிகளில் தீவிர ேசாதனை நடத்தினர். பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருப்பு பாதை போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மற்றும் கருவிகளை கொண்டு தீவிர சோதனை செய்தனர்.
மேலும் தண்டவாளம், ரயில் நிலையம் வாகனம் நிறுத்தும் இடம், ரயில் நிலைய பிளாட்பார பகுதிகளில் சோதனை செய்தனர். மேலும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நடக்கும் மாவட்ட விளையாட்டு மைதானமான தருவை மைதானம் முழுக்க முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post குடியரசு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையம், ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை appeared first on Dinakaran.