கோவை, ஜன. 26: நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்று காலை வஉசி மைதானத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். இந்நிலையில், கோவையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமானநிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. போலீசார் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.
மலர் என்ற மோப்ப நாய் உதவியுடன் பார்சல் அலுவலகம், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை, வெளியூரில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயிலில் உள்ள பெட்டிகள் என தீவிர சோதனை நடத்தப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவித சம்பவங்களை தடுக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post குடியரசு தின விழாவையொட்டி கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை appeared first on Dinakaran.