பெரம்பூர்: குடிபோதையில் பஸ்சில் ஏறக்கூடாது என்றதால் டிக்கெட் வழங்கும் மெஷினை உடைத்து கண்டக்டரை சரமாரியாக தாக்கிய வாலிபரை கைது செய்தனர். சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (39). இவர் சென்னை போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர். நேற்று, மணலியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் தடம் எண் 64 சி பேருந்தில் சென்றார். புளியந்தோப்பு நெடுஞ்சாலை காவல்நிலையம் அருகே உள்ள பேருந்துநிறுத்தத்தில் ஒருவர் ஏறியபோது அவர் போதையில் தள்ளாடியதால் கண்டக்டர் அவரை மறித்து, ‘’பேருந்தில் ஏறாதீர்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.
இதன்காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது கண்டக்டரிடம் இருந்து டிக்கெட் மெஷினை பறித்து கீழே போட்டு உடைத்துள்ளார். பின்னர் கண்டக்டர் பிரேம்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அந்த நபர் ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் வந்து விசாரித்துவிட்டு குடிபோதையில் தகராறு செய்த புளியந்தோப்பு மோதிலால் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி வீரமணி (30) கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ‘’குடிபோதையில் ஏறக்கூடாது’’ என்றதால் டிக்கெட் வழங்கும் கருவியை உடைத்து கண்டக்டருக்கு சரமாரியாக அடி உதை: வாலிபர் கைது appeared first on Dinakaran.