கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே தன்னுடன் இருந்த கள்ளத் தொடர்பை கைவிட்ட ஆத்திரத்தில் ஒரு இளம்பெண்ணை, அவரது கள்ளக்காதலனான எலக்ட்ரிஷியன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். அவரை நேற்றிரவு திருவண்ணாமலையில் கைது செய்தனர். மேலும், பெண்ணின் அழுகிய சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வண்டலூர் அருகே நல்லம்பாக்கம், பெருமாள் கோயில் அருகே திருநாராயணபுரம், அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் சங்கர் (50). தையல் தொழிலாளி. இவருக்கு மனைவி செல்வராணி (38), மகன் தினேஷ் (29), மகள் தேவதர்ஷினி (16) ஆகியோர் உள்ளனர். இதில் செல்வராணி, நல்லம்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பில் ஹவுஸ்கீப்பிங் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு வாடகைக்கு தனியே குடியிருந்து, அதே நிறுவனத்தில் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்த குமரேசன் என்பவருடன் செல்வராணிக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, கள்ளக்காதலாக வளர்ந்தது. இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தனது கணவர் கண்டித்ததும், குமரேசனுடன் இருந்த கள்ளத் தொடர்பை செல்வராணி கைவிட்டுள்ளார். இதில் செல்வராணி நீண்ட நாட்களாக குமரேசன் போன் செய்தும் எடுக்காததால் ஆத்திரமானார். இதையடுத்து, கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்ற செல்வராணி, அதன்பிறகு வீடு திரும்பாமல் காணாமல் போய்விட்டார். இதுகுறித்து தாழம்பூர் போலீசில் செல்வராணியின் கணவர் சங்கர் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர். இதில், செல்வராணிக்கு கடைசியாக போன் செய்தது திருவண்ணாமலையை சேர்ந்த குமரேசன் என்பதும், இவர் கடந்த 4 நாட்களாக வேலைக்கு வரவில்லை என்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து திருவண்ணாமலைக்கு தாழம்பூர் போலீசார் சென்று, குமரேசன் குறித்து விசாரித்தனர்.
மேலும், அங்கு பதுங்கியிருந்த குமரேசனை கைது செய்து, நேற்று மாலை தாழம்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அதே தனியார் நிறுவன குடியிருப்புல் தங்கியிருந்து, அங்கு எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (31) என்பவர், காணாமல் போன செல்வராணியுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. மேலும், தனக்கு திருமணமாகி மனைவி ஜெய மற்றும் யாஷிகா என்ற மகள் இருக்கிறார். நல்லம்பாக்கத்தில் தனியே தங்கியிருந்தபோது செல்வராணியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்யும்படி செல்வராணி வலியுறுத்த தொடங்கினார். இதில் பயந்து போய், அவரை காயார் அருகே குமிழி வனப்பகுதிக்கு அழைத்து சென்று, செல்வராணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவரது சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டேன் என்று குமரேசன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்றிரவு குமிழி வனப்பகுதியில் அழுகிய நிலையில் இருந்த செல்வராணியின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அச்சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, குமரேசனிடம் விசாரித்து வருகின்றனர்.
The post கூடுவாஞ்சேரி அருகே கொடூரம்; கள்ளத் தொடர்பை கைவிட்டதால் இளம்பெண் படுகொலை: எலக்ட்ரிஷியன் கைது appeared first on Dinakaran.