காந்திநகர்,
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுமிகள் 4 பேர் நேற்று முன்தினம் மாலை தங்களின் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளிர் அதிகமாக இருந்ததால் நெருப்பு மூட்டி குளிர்காய்வதற்காக சிறுமிகள் அங்கிருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு மூட்டினர்.
சிறுமிகள் 4 பேரும் நெருப்பை சுற்றி நின்று கொண்டு குளிர் காய்ந்தபோது திடீரென வாந்தி எடுத்தனர். பின்னர் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு சிறுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சிறுமிகளின் உயிரிழப்புக்கு அவர்களின் உறவினர்கள் மாறுபட்ட காரணங்களை கூறுகின்றனர். சிலர் சிறுமிகள் சாப்பிட்ட ஐஸ்கிரீம்தான் அவர்களின் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறுகின்றனர். மேலும் சிலர், நெருப்பில் குளிர்காய்ந்தபோது அதில் இருந்து வெளியான விஷவாயுவை சுவாசித்ததன் காரணமாக சிறுமிகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உறுதியான தகவல் தெரியவரும் என்றும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.