குஜராத், மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசாதது ஏன்? தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா நீங்க கேட்கிறீங்க: அண்ணாமலை மீது சீமான் கடும் தாக்கு

3 months ago 4

கோவை: கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது ஓட்டு பிச்சை எடுக்க வந்தவர் சீமான் என அண்ணாமலை கூறி உள்ளாரே? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு சீமான் கூறியதாவது: குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றவர்களை இவர் (அண்ணாமலை) எப்படி பார்க்கிறார்? குஜராத், ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கு அப்பா, அம்மா இல்லையா? மணிப்பூரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன?, கோவை குண்டு வெடிப்பை பற்றி பேசுபவர்கள், குஜராத் கலவரத்தை பற்றியும் பேச வேண்டும். ராஜீவ்காந்தி கொலையை பற்றி பேசுபவர்கள், அவரால் அனுப்பப்பட்ட ராணுவம் ஈழத்தில் நடத்திய பேரழிவை பற்றியும் பேச வேண்டும்.

அல்லா மீது ஆணையாக இதுவரை இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டதில்லை. நான் ஓட்டுக்காக நிற்பவன் என்றால் இதை பேசியிருக்க மாட்டேன். எனக்கு ஓட்டு போட்டால் போடு, போடாவிட்டால் போ. நீ மக்களுக்காக நிற்கிறாய் என்றால், எதற்காக ஓட்டிற்கு காசு தருகிறாய்? நான் ஓட்டு பிச்சை எடுக்கிறேன் என்றால், நீங்கள் என்ன எடுக்கிறீர்கள்? வீட்டிற்கு வந்து தந்து விட்டு செல்கிறார்களா? நீங்கள் தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல், தானம், தர்மம் பண்ணுங்கள் என்றா கேட்கிறீர்கள்? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பாட்ஷாவை நான் அப்பா என்று தான் அழைப்பேன்.

இனி வரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு நடந்ததையே திரும்ப திரும்ப சொல்லி சமூக இணக்கத்தை கெடுக்காதீர்கள். விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்துவது அரசியல் ஆதாயம் என்றால், எல்லோரும் பயன்படுத்துங்கள். அதற்காக தான் நான் பாடுபடுகிறேன்.
எனது துப்பாக்கியில் இருந்து போகும் தோட்டாவின் வலிமை, உனது நாக்கிற்கு இருக்கிறது என பிரபாகரன் கூறினார். எனது ஒவ்வொரு வார்த்தையும் வெடிகுண்டு தான். இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டுக்கே நான்தான் பாதுகாப்பு விஜய் குறித்த கேள்விக்கு தடாலடி சீமானிடம் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், ‘விஜய்க்கு மட்டுமின்றி நிறைய பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் போன்ற புகழ் பெற்ற நடிகருக்கு கூட்டத்தை சமாளிப்பது சிரமம் என்பதால், பாதுகாப்பு கேட்டு வாங்கி இருப்பார்கள். இதனை பெரிதுபடுத்த தேவையில்லை. என்னால்தான் மக்களுக்கு பாதுகாப்பு என நினைப்பவன் நான். எனக்கு என் சொந்த நாட்டில் பாதுகாப்பு தேவையில்லை. நான்தான் நாட்டுக்கு பாதுகாப்பு’ என்றார்.

‘காசு கொடுத்தால் டிரம்புக்கே வியூக வகுப்பாளராவேன்’விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா ஆகிய இரண்டு வியூக வகுப்பாளர்கள் போதுமானது. எதற்காக பீகார், ஆந்திராவில் இருந்து வரும் வியூக வகுப்பாளர்கள் வேண்டும்? பிரசாந்த் கிஷோரினால் பீகாரில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. காசுக்காக அவர் வேலை செய்கிறார். எனக்கு காசு கொடுங்கள். இந்தியாவிற்கு என்ன, அகில உலகத்திற்கே வியூக வகுப்பாளராக செயல்படுகிறேன். ஏன், அமெரிக்க அதிபர் டிரம்புக்கே வியூக வகுப்பாளராக செயல்பட தயார். ஜான் ஆரோக்கியசாமி எனக்கு வியூக வகுப்பாளராக வேலை செய்யவில்லை. அவருடன் கட்சி, அரசியலை தாண்டி உறவு உள்ளது. அவர் சில யோசனைகளை சொன்னார். அவரை போல ஒரு நாளைக்கு 100 பேர் எனக்கு யோசனை தருகிறார்கள்’ என்றார்.

The post குஜராத், மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசாதது ஏன்? தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்காமல் தானம், தர்மமா நீங்க கேட்கிறீங்க: அண்ணாமலை மீது சீமான் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article