குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் விடிய விடிய ட்ரோன் தாக்குதல்; இந்தியாவின் பதிலடியில் 4 பாக். விமான தளங்கள் தகர்ப்பு: டெல்லி நோக்கி வந்த ஏவுகணையை வீழ்த்தியதால் ஆபத்து தவிர்ப்பு

3 hours ago 1

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக ‘ஆபரேஷன் புன்யான் உல் மர்சூஸ்’ என்ற பெயரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் தகர்க்கப்பட்டதாகவும், லூனி என்ற தீவிரவாத ஏவுதளத்தை பிஎஸ்எப் அழித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்திய எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவில் இருதரப்பிலும் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எந்த சமரசமும் இன்றி துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தையும் அழித்தொழித்துள்ளது. இந்த நிலையில்தான், இந்திய ராணுவம் இன்று காலை தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிபொருள்களைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற ஒரு தொடர் தாக்குதலில், இன்று காலை 5 மணியளவில், அமிர்தசரஸின் காசா கான்ட் மீது பாகிஸ்தானின் ஆயுதமேந்திய ஏராளமான ட்ரோன்கள் பறந்து வந்து தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எடுத்த துரித நடவடிக்கையால், பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தியாவின் இறையாண்மையை மீறி நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கும், நாட்டு மக்களை ஆபத்தில் தள்ளுவதற்கும், தொடர்ந்து பாகிஸ்தான் எடுத்துவரும் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது.

எதிரிகளின் திட்டங்களை இந்திய ராணுவம் துணிவோடு முறியடிக்கும்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.அதேநேரம் பாகிஸ்தானின் நான்கு முக்கிய விமானத் தளங்களை குறிவைத்து கடுமையான பதிலடி தாக்குதல்களை நேற்றிரவு நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்கள், இஸ்லாமாபாத் அருகே ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளம், ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி விமானத் தளம், சக்வாலில் உள்ள முரிட் விமானத் தளம் மற்றும் இந்தியாவுக்கு அருகில் உள்ள சியால்கோட் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்கப்பட்டன. பாகிஸ்தானில் ஒரே இரவில் நடந்த சம்பவங்களால், 4 விமானப்படை தளங்கள் வெடித்து சிதறின. 3 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

சிர்சாவில் ஃபட்டா ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்தது. முன்னதாக ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக பாகிஸ்தானால் அறிவிக்கப்பட்ட ‘ஆபரேஷன் புன்யான் உல் மர்சூஸ்’ தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றிரவு விடியவிடிய பாகிஸ்தான் ராணுவ நிலைகளை இந்திய விமானப்படை தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தின. இந்த தாக்குதல்களால் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் ஷோர்கோட் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பாகிஸ்தானின் ராணுவ செய்திதொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘பஞ்சாப் மற்றும் அசாத் ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் தாக்கியது.

இந்தியாவால் ஏவப்பட்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் வான்பாதுகாப்பு ஆயுதங்கள் இடைமறித்தன. இருப்பினும், 5 விமானப்படை விமானங்களை இந்தியா இழந்தது’ என்றார். மேலும் பாகிஸ்தானின் பதிலடி தாக்குதல்களில், இந்தியாவின் பதான்கோட் விமானத் தளம், உதம்பூர் விமானப்படை நிலையம் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை தளம் ஆகியவை குறிவைக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய எல்லைக் காவல் படை, பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி என்ற இடத்தில் அமைந்திருந்த தீவிரவாத ஏவுதளத்தை இன்று முற்றிலுமாக அழித்ததாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல், ஜம்மு பிரிவில் உள்ள பிஎஸ்எஃப் நிலைகளின் மீது பாகிஸ்தான் தரப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டது.

பிஎஸ்எஃப் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘நேற்றிரவு 9 மணி முதல், ஜம்மு பிரிவில் உள்ள பிஎஸ்எஃப் நிலைகளின் மீது பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. இதற்கு பிஎஸ்எஃப் தகுந்த முறையில் பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ரேஞ்சர்களின் நிலைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது. அக்னூர் எதிரே உள்ள சியால்கோட் மாவட்டத்தின் லூனியில் உள்ள தீவிரவாத ஏவுதளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஜம்மு மாவட்டத்தின் பிஷ்னா, குஜராத்தின் கட்சி, ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பிகானர், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் ஆகிய மாநிலங்களின் எல்லையோர நகரப் பகுதிகளின் மீது நேற்றிரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய வான் பாதுக்காப்பு ஆயுதங்கள் இடைமறித்து வீழ்த்தியது. அதனால் அப்பகுதிகளில் பாகிஸ்தானின் ஆயுத உதிரி பாகங்கள் மீட்கப்பட்டன.

மேலும் டெல்லியை நோக்கி பாகிஸ்தானின் ஏவுகணை வந்ததால், அந்த ஏவுகணையை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து வீழ்த்தியதால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையாகவும், பாகிஸ்தானின் ‘ஆபரேஷன் புன்யான் உல் மர்சூஸ்’ நடவடிக்கைக்கு பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களின் 26 இடங்களின் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. ஆனால் இவற்றை இந்தியாவின் எஸ்-400 வான்பாதுகாப்பு ஆயுதங்கள் இடைமறித்து வீழ்த்தின. தற்போது பாகிஸ்தானின் லூனி ஏவுதளத்தை இந்திய ராணுவம் அழித்ததால், பாகிஸ்தானின் தீவிரவாத உள்கட்டமைப்பை முடக்கியது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

கடன் ஒப்புதலுக்கு இந்தியா எதிர்ப்பு;
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 7 பில்லியன் டாலர் நீடித்த கடன் நிதி வசதி திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் (8,350 கோடி ரூபாய்) தவணையை உடனடியாக விடுவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் அலுவலக அறிக்கையின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலுக்கு பிரதமர் ஷெபாஸ் ஹெரீப் திருப்தி தெரிவித்ததுடன், இந்த நிதி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவும் என்று கூறியுள்ளார். இந்த ஒப்புதலுக்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியானது, எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை இந்தியா தெரிவித்தது. மேலும் கடன் ஒப்புதலுக்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா வெளியேறியது. முன்னதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அளித்த பேட்டியில், ஐஎம்எஃப் வழங்கும் நிதிகள் பாகிஸ்தானின் ராணுவ-உளவு நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக உதவுவதாக குற்றம் சாட்டியிருந்தார். தற்போது உடனடியாக விடுவிக்கப்படும் 1 பில்லியன் டாலர் தவணை, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் ஒப்புக் கொள்ளப்பட்ட 7 பில்லியன் டாலர் ஐஎம்எஃப் திட்டத்தின் பகுதியாகும். இந்த தொகையை வரும் 2027 அக்டோபர் வரை வழங்கும். கடந்த 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகளாக பாகிஸ்தான் ஐஎம்எஃப் நிதியை பெற்று வருவதையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு திட்டங்களில் நிதியை பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய இந்தியா, இதேபோல் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதியை வழங்குவதால், அந்த நாடு கடனாளியாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்கு ஐஎம்எஃப் திட்ட வடிவமைப்பு அல்லது பாகிஸ்தானின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் காரணமாக இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளது.

கட்ச் மக்களுக்கு எச்சரிக்கை;
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் ராணுவ மோதல் காரணமாக, குஜராத்தின் கட்ச் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் சனிக்கிழமை அன்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நேற்றிரவு கட்ச் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது. மேலும், கட்ச் மற்றும் குஜராத்தின் இரண்டு மாவட்டங்களில் மின் தடை செய்யப்பட்டது. சர்வதேச எல்லைகள் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் டிரோன்கள் காணப்பட்ட 26 இடங்களில் புஜ் மாவட்ட தலைமையகமும் ஒன்று. நேற்றிரவு கட்ச் மற்றும் குஜராத்தின் பனஸ்கந்தா மற்றும் பட்டான் மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பட்டான் மாவட்டத்தின் சாந்தல்பூர் தாலுகாவை ஒட்டியுள்ள சில கிராமங்களிலும் மின் தடை செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் விடிய விடிய ட்ரோன் தாக்குதல்; இந்தியாவின் பதிலடியில் 4 பாக். விமான தளங்கள் தகர்ப்பு: டெல்லி நோக்கி வந்த ஏவுகணையை வீழ்த்தியதால் ஆபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article