
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள அட்சயலிங்க சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இந்த வைபவத்தை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், வலது பாத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு உற்சவமூர்த்தி அட்சயலிங்கசாமி, சுந்தரகுஜாம்பிகை அம்மனுடன் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்தனர்.
சிறப்பு யாக பூஜைகளுக்கு பின்னர் மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடந்தன. இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி-அம்பாள் திருமணக் கோலத்தை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.