*அகழாய்வு நடத்த வேண்டுகோள்
வருசநாடு : கீழடி, வெம்பக்கோட்டை போல மயிலாடும்பாறையிலும் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் இங்கும் அகழாய்வு பணிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை பகுதியில் கிளியன்செட்டி மலை அமைந்துள்ளது. இதன் அடிவார பகுதிகளில், அவ்வபோது பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகிறது.
கடந்த 6 மாதங்களாக இப்பகுதிகளில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான செல்வம் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் ஆய்வில் நுண்கற்காலம் முதல் புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்று காலம் வரையிலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து செல்வம் கூறியதாவது:கிளியன்செட்டி மலைப்பகுதியின் அடிவாரத்தில், நுண் கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக செர்ட் வகை கருவிகள் கிடைத்துள்ளன. இதேபோல் புதிய கற்காலத்தில் இப்பகுதிகளில் பழந்தமிழர் குடியிருப்புகள் இருந்ததை உறுதி செய்யும் வகையில் அரவை கல், மண் ஓடுகள், கருவிகள் உள்ளிட்டவை உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இவற்றுடன் கற்களை வழுவழுப்பாக மாற்றி கோடரி, உளி போன்ற கருவிகள் மற்றும் விலங்குகளின் எலும்புகள், கொம்பு ஆகியவற்றால் ஆன கருவிகள் கிடைத்துள்ளது. இப்பகுதியில் இயற்கை அரணாக மலைகள் சூழ்ந்துள்ளதால், குடியிருப்பு அமைத்து பழங்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
இதேபோல், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த முதுமக்கள் தாழி, ஓடுகள், கல்வட்டம் கல்பதுக்கை உள்ளிட்ட நினைவு சின்னங்கள், மண் ஓடுகள் உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இவற்றுடன் வரலாற்று காலத்தில் பயன்படுத்திய குறியீடுகள் கொண்ட மண் ஓடுகள், மண் சுடுவதற்கு முன், சுடுவதற்கு பின் போடப்பட்ட மண் குறியீடுகள் ஆகியவை 40 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. இப்பகுதியில் தமிழக அரசு முறையான தொல்பொருள் அகழாய்வு நடத்த வேண்டும். இதன் வாயிலாக பல்லாயிரம் ஆண்டு பழமையான பழந்தமிழர் நாகரிகம் வெளியே வரும்.இவ்வாறு கூறினார்.
The post கீழடி, வெம்பக்கோட்டை போல கற்கால தமிழர்களின் பொருட்கள் மயிலாடும்பாறையில் கண்டெடுப்பு appeared first on Dinakaran.