தொண்டி, ஜன.30: கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் திரிவதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியில் செக்போஸ்ட், பாவோடி மைதானம், வட்டாணம் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், பெருமானேந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடு மாடுகள் கூட்டமாக நிற்கிறது. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியில் படுத்துக் கொள்வதால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது. கடந்த காலங்களில் ரோட்டில் திரியும் மாடுகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அடைத்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தது. தற்போது இப்பணி நடைபெறாததால் மீண்டும் ஆடு மாடுகள் ரோட்டில் திரிகிறது. பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்துல் மஜீத் கூறியது, தொண்டி முழுவதும் ரோட்டில் எங்கு பார்த்தாலும் ஆடு மாடு திரிகிறது. டூவீலரில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து தொண்டி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தொடுத்த வழக்கின்படி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விபத்துகள் தொடர்கிறது. கோர்ட் உத்தரவுபடி நடவடிக்கை எடுக்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
The post கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.