சென்னை: புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை (18ம் தேதி) சிறப்பு ஆராதனை மற்றும் சிலுவைப்பாதை ஊர்வலங்கள் நடக்கிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளி ஆகும். இதனை துக்க வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இதனையொட்டி தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரம் ஆகும். புனித வாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆகும்.
இதனையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நாளை சிறப்பு ஆராதனை நிகழ்வுகள் நடைபெறுகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் வார்த்தை வழிபாடு நிகழ்வு நடைபெறுகிறது. இது காலையில் தொடங்கி நடைபெற இருக்கிறது. அருட்பணியாளர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடு வசனங்களை கூறி மன்றாட்டு நடத்துகின்றனர். பின்னர் திருச்சிலுவை வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் திருச்சிலுவையை முத்தமிடும் நிகழ்வும், காணிக்கை செலுத்துதலும் நடக்கிறது.
அதன் பிறகு சிலுவைப்பாதை ஊர்வலம் நடக்கிறது. இதில் இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்வது போன்றுள்ள நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன. ஊர்வலத்தில் இயேசு கிறிஸ்து வேடத்தில் ஒருவர் சிலுவையை சுமக்கின்ற வகையில் ஊர்வலம் நடக்கிறது. காவலர் வேடம் அணிந்தவர்கள் அவரை துன்புறுத்துவது, இயேசு கீழே விழுதுல், மரியாள் சந்திப்பு, இயேசு கிறிஸ்துவுக்கு சீமோன் உதவுதல், இயேசுகிறிஸ்துவின் ரத்தம் தோய்ந்த முகத்தை பெண் ஒருவர் துடைப்பது, அதில் இயேசுவின் முகம் பதிவாகுதல், 2வது முறையாக இயேசு கிறிஸ்து கீழே விழுதல், பெண்கள் ஆறுதல் அளித்தல், 3வது முறையாக இயேசு கீழே விழுதல், அவரது ஆடைகளை அகற்றுதல், சிலுவையில் அறைதல், உயிர் துறப்பு, அவரது உடலை மரியாள் தாங்கிக்கொள்வது, உடல் அடக்கம் செய்வது போன்றவை சிலுவைப்பாதை ஊர்வலத்தின்போது காட்சிப்படுத்தப்படுவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. புனித வெள்ளியின் தொடர்ச்சியாக இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக வரும் 20ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது.
The post கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை புனித வெள்ளி சிறப்பு ஆராதனை appeared first on Dinakaran.