
சென்னை,
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். உயிர்ப்பு விழா என்று அழைக்கப்படும் இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு
ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை அரசராக பாவித்து கோவேரி கழுதையில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் குருத்தோலை திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த குருத்தோலை பவனி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் குருதோலையை கையில் ஏந்தியபடி 'ஓசானா' என்ற பாடலை பாடியபடி ஊர்வலமாக செல்வார்கள்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை பவனியானது ஆயர் நசரேன் சூசை தலைமையில் காலை 6.30 மணிக்கு நடக்கிறது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெறும். இதேபோல கன்னியாகுமரி, தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வருகிற 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும். 17-ந் தேதியன்று பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெறும். 18-ந் தேதியை இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமாக கடைபிடித்து புனித வெள்ளியாக அனுசரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.