கிரேன் பெல்ட் அறுந்து விபத்து 5 டன் இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உடல் நசுங்கி பலி

3 hours ago 1

*வாணியம்பாடி அருகே சோகம்

வாணியம்பாடி : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தயார் செய்யும் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் இயந்திரங்கள் தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி வடமாநிலங்களில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஒர்க் ஷாப்பில் புதிதாக தயார் செய்த இயந்திரத்தை வடமாநிலத்திற்கு அனுப்புவதற்காக கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடந்தது. இப்பணியில் வாணியம்பாடி, கோணாமேடு புத்தன் நகரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி ஜெய்சங்கர்(55) என்பவர் உட்பட 6 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, கிரேனில் இருந்த பளு தூக்கும் பெல்ட் திடீரென அறுந்ததில் சுமார் 5 டன் எடையுள்ள இயந்திரம் அங்கிருந்த தொழிலாளி ஜெய்சங்கர் மீது விழுந்தது.

இதில், படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெய்சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், பலியான தொழிலாளி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயந்திரம் விழுந்து தொழிலாளி உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கிரேன் பெல்ட் அறுந்து விபத்து 5 டன் இயந்திரம் விழுந்ததில் தொழிலாளி உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Read Entire Article